சபாநாயகர் கருவுக்கு கொலை அச்சுறுத்தல்
சபாநாயகர் கரு ஜயசூரியவை படுகொலை செய்யப்போவதாக நேற்று முன்தினம் தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக செயற்பட்டுவரும் 52 உறுப்பினர்களைக்கொண்ட கூட்டு எதிர்க்கட்சியினருக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் படுகொலை செய்வதாகவே மேற்படி தொலைபேசி மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பிரஸ்தாபித்திருந்ததுடன் சபை உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமர்வின்போது மஹிந்த அணியின் பிரதானியாக செயற்பட்டுவரும் தினேஷ் குணவர்த்த எம்.பி. தமது அணியை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை அறிவிக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தியதுடன் மஹிந்த அணியின் ஆதரவாளர்கள் அனைவரும் சபை நடுவே கூடி ஆர்ப்பாட்டத்தையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். இதனால் சபையில் கடும் சர்ச்சை நிலை நேற்று முன்தினம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் சர்ச்நை நிலை ஏற்பட்டபோது சபாநாயகர் கருஜயசூரியவுக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின்போது ஏற்பட்டிருந்த சர்ச்சை நிலைக்கு மத்தியில் தனது கருத்துக்களை வெளியிட்ட சபாநாயகர் கருஜயசூரிய தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தினேஷ் குணவர்த்தன எம்.பி தலைமையிலான "மஹிந்த" ஆதரவு அணிகள் பொது எதிர்க்கட்சியாக ஏற்றுக் கொண்டு சுயாதீன குழுவில் பாராளுமன்றத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென சர்ச்சை நேற்று புதன்கிழமையும் பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்டு வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன.
இதற்கு மத்தியில் சபாநாயக்கர் கருஜயசூரிய சபையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் மேலும் இது தொடர்பில் கூறுகையில் நேற்று (செவ்வாய்கிழமை) பாராளுமன்றத்தில் இப் பிரச்சினை எழுப்பப்பட்டு அமளி துமளி ஏற்பட்டது.
இதன் போது எனக்கு எதிரான அவதூறான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. ஆனால் நான் அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு எனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இது எனக்கு மிகவும் வேதனையளித்தது. இங்கு பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளையே செய்கின்றனர்.அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. ஏனவே அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பதும் பிழையான செயலாகும் என்றும் சபாநாய கர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.
இதன் போது சபையில் உரையாற்றிய ஐக்கிய தேசிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி டலஸ் அழகப்பெரும, சபாநாயக்கருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதானது பாரதூரமானதாகும். எனவே இது தொடர்பில் வெளிப்படையாக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது எம்மீது சுமத்தப்படும் என்றார்.