யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்பது கட்டுக்கதை - ஜனாதிபதி ஆணைக்குழு
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டாக சுமத்தப்படும் குற்றச்சாட்டானது கட்டுக்கதை என, காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட 2ஆம் கட்ட விசாரணைகளின் அறிக்கை நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களால், தருஸ்மன் அறிக்கையும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் சர்பியா மற்றும் குரேஷியா நாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை கண்டறிந்துள்ளதாகவும் ஆயுதமேந்தியவர்களால் பொதுமக்கள் பட்டினி போடப்பட்டதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யுத்த சூனிய வலயங்களாக எந்த பிரதேசங்களும் காணப்படவில்லை என்றும் விடுதலைப்புலிகளால் யுத்த சூனிய வலயங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப் பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி; ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான பொதுமக்கள் விடுதலை புலிகளால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டமையாலேயே சிவிலியன்கள் பலர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் விசேட நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
அதிலும் முக்கியமாக அவ் விசாரணை குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.