புதிய கட்சி அமைக்கிறது மகிந்த அணி
மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க நேற்றிரவு நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் முடிவு செய்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த- மகிந்த ஆதரவு, அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த முடிவை எடுத்துள்ளனர்.
நேற்றிரவு மீரிஹானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில், கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்தக் கூட்டத்தில், புதிய கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமிக்கவும், ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.