மஹிந்தவை கைது செய்ய வேண்டும் - கம்பன்பில கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் உருவாகவுள்ள புதிய கட்சியின் உருவாக்கத்தை தடுக்கவும், அரசியல் பழிவாங்கல்களுக்காகவுமே மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர். அரச வளங்களை சூறையாடியதாக தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தும் நல்லாட்சி அரசானது இவற்றில் உண்மைத்தன்மை காணப்படுமாயின் அவரை கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
யோஷித்தவின் கைது தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சருடனும் பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக என சவால் விடுக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குறிப்பிடுகையில்
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில அரசியல் பழிவாங்கல்களின் அடிபடையிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.
சி.எஸ்.என். தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்கு 207 மில்லியன் ரூபா மூலதனமாக இடப்பட்டுள்ளது. இது எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரனைகளின் அடிபடையிலேயே யோஷித ராஜபக்ஷவை பொலிஸ் நிதிக் குற்றவியல் பிரிவினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளனர்.
இதனிடையே சி.எஸ்.என். தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போது 5 மில்லியன் ரூபா வெளிநாடொன்றில் இருந்து கிடைக்கப் பெற்றது என கூறப்பட்டுள்ளமையானது முற்றிலும்பொய்யான விடயம். அவ்வாறு எவ்வாறான தொகையும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கபெறவில்லை. மிகுதியாக காணப்படும் 202 மில்லியன் தொகையானது வங்கிகள் மூலமும் சில வர்த்தகர்களின் மூலமும் கடனாகவே பெறப்பட்டுள்ளது. கடந்தக்காலங்களில் இதில் பெறப்பட்ட வருமானங்கள்; மூலமாக இதில் சில குறிப்பிட்ட கடன்களானது வட்டி உள்ளடங்களாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியில் எத்தனை பேர் பங்குதாரர்கள் மற்றும் இது தொடர்பிலான தெளிவான அறிக்கையையும், ஆதாரத்தையும் நாங்கள் நீதிமன்றிலும், பொலிஸ் நிதிக் குற்றவியல் பிரிவிலும் சமர்ப்பித்துள்ளோம். இவ்வாறான நிலையில் அரசாங்கம் குறிப்பிடுவதானது உண்மையென்றால் அதன் சாட்சியங்களை முன்வைக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுப்பதோடு சவால் விடுக்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சியொன்று உருவாகும் என்ற அச்சத்தின் காரணமாகவே மைத்திரி யோஷிதவை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார். நாட்டின் சட்டம் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட இடமளிக்க முடியாது. நாட்டின் அரச வளங்களை யோஷிதவோ மஹிந்தவோ அல்லது எவராயினும் சூறையாடியிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தலாம். அதற்கு நாங்களும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை.
ஆனால், பொய் குற்றச்சாட்டில் ஒருவரின் அரசியல் நடவடிக்கைகளை முடக்குவதற்கு இவ்வாறு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு அனுமதயளிக்கக் முடியாது. யோஷித கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அரசுடன் நேரடி விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சராவது அதற்கு தயார் என்றால் நானும் தயார்.
மைத்திரி - மஹிந்த சந்திப்பு
அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கடந்த ஊடவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தை காப்பாற்றவே தனது கட்சியின் தலைமை பதவியை துறந்ததாகவும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாமல், சிரந்தி ராஜக்ஷவின் கைதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்தில் ஒரு விடயம் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது அதாவது சர்வாதிகார ஆட்சியையும் நிறைவேற்று அதிகாரத்தையும் ஒழிப்பதாக தெரிவித்தவர்களே அதனை பயன்படுத்தியுள்ளமை தெட்ட தெளிவாக புலப்படுகின்றது. எனவே இது தொடர்பில் மக்கள் உண்மை தன்மையினை புரிந்து கொள்வார்கள் என்றார்.