Breaking News

அனைத்துலக கண்காணிப்புடன் போர்க்குற்ற விசாரணை – வலியுறுத்துகிறார் சரத் பொன்சேகா

இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக கண்காணிப்பாளர்களின் பங்களிப்புடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் போது, அனைத்துலக கண்காணிப்பாளர்களின் பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசிம்.தற்போது இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும், சந்தேகங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணைகள் அவசியம்.

எனவே, இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை இராணுவத்தினருக்குக் கட்டளை பிறப்பித்தவன் என்ற வகையில், அந்த இராணுவத்தினரை இத்தகைய குற்றச்சாட்டுக்களில் இருந்து மட்டுமன்றி, அவர்களின் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய பாரிய கடமை எனக்கு உள்ளது.

போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது அனைத்துலக கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனும், ஆலோசனைகளுடனும் நடைபெற்றால் அது நம்பகத்தன்மை வாய்ந்தாக அமையும். இதுவே எனது நிலைப்பாடு. அதற்காக நான் முழு அளவில் பங்களிப்பை வழங்கவுள்ளேன்.” என்று குறிப்பிட்டார்.