வடக்கின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே!
வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார்.
தனக்கு இவ்வாறானதொரு பதவி கிடைக்கவுள்ளது என அறியக் கிடைத்தது என்று ரெஜினோல்ட் குரேவே உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
ஆளுநர் பதவியில் இருந்து விலகிக்கொள்வது குறித்து அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.இந்த இடத்துக்கே ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார்.புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ள ரெஜினோல்ட் குரே மேல் மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரான இவர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் 15.01.2015 அன்று எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்காரவை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.