இலங்கைக்கு 31 மில்லியன் டொலர் நிதியுதவி – அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் ஊழல் எதிர்ப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 31 மில்லியன் டொலர் (சுமார் 4350 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கும் திட்டம் ஒன்றை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, முன்வைத்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நடந்த அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான அரசியல் மாற்றங்களின் பின்னர், இலங்கைக்குப் பெருமளவிலான நிதியுதவிகளை அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
இதற்கமைய, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால், அமெரிக்க காங்கிரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில், புதிய பட்டுப்பாதை மற்றும் இந்தோ- பசுபிக் பொருளாதாரப் பாதை முயற்சிகளின் ஒரு அங்கமாகவே இலங்கைக்கு, 31 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒக்ரோபர் 01ஆம் நாள் தொடங்கும், 2016-2017ஆம் நிதியாண்டில்,இலங்கைக்கு 31 மில்லியன் டொலர் நிதியுதவிகளை வழங்க அமெரிக்க இராஜாங்கச் செயலர் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நிதியுதவி,2017ஆம் நிதியாண்டில் ஆட்சியை வலுப்படுத்தல், ஜனநாயக மறுசீரமைப்பு. மற்றும் சட்டம் ஒழுங்கை ஊக்குவித்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நீதித்துறை நிறுவனங்களை வலுப்படுத்தல், மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு ஆதரவளித்தல் என்பனவற்றுக்குச் செலவிடப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வளங்கள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள், ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.