திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்றியமைக்க திட்டம்!
திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டு திட்டம் ஒன்றினை 2011 ஆம் ஆண்டில் அரசு திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, மாத்தளை உட்பட பல மாவட்டங்கள் உள் வாங்கப்பட்டுள்ளன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முன் வரைவு கருத்தறிவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தீர்வுத்திட்ட நிபுணர்குழுவின் அங்கத்தவர் சட்டத்தரணி காண்டீபன், பரந்தாமன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், மலைமுரசு பத்திரிகை ஆசிரியர் ஞானேஸ்வரன், எழுத்தாளர் யதீந்திரா, சட்டத்தரணி ஜெகஜோதி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறுகையில், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் திருகோணமலையின் சனத்தொகை 10 இலட்சம் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைகள் தொழில்நுட்ப நிலையங்கள் முதலியனவற்றிற்கு தெற்கில் இருந்து சிங்கள் மக்களை குடியேற்றி திருகோணமலையின் துறைமுகத்தை மையமாக வைத்து பல அபிவிருத்தித் திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் அமைத்து தமிழர்களை அரிதாக்கும் திட்டம் அது. அவ்வாறான திட்டங்களை தடுக்கக் கூடிய தீர்வுகளை நாம் முன் வைக்கவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தை வகிக்கும் இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பிய இந்த மாவட்டத்தின் இவ்வாறான நிலையை நாம் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
சட்டத்தரணி காண்டீபன் - தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முன் வரைபு தொடர்பாக விளக்கமளித்த சட்டத்தரணி காண்டீபன் கருத்துக் கூறும் போது,
இனப்படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா.வில் நிபுணர் மாட்டி அடிசாகி நிரூபித்தமையாலேயே கோசோவா நாட்டிற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே இன்று நாம் கோரும் சமஷ்டி தீர்வுக்கு கட்டாயம் இனப்படுகொலை நீருபிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை சீனக்குடா விமான நிலையம் இயற்கைத் துறைமுகம் மற்றும் கடற்கரைக்கு முன்னால் உள்ள கடற்படை அருங்காட்சியகம் உட்பட அவை மாநில சுயாட்சி மூலம் எமக்கே சேரவேண்டும் என தனது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முன் வரைபு விளக்கத்தின் போது சட்டத்தரணி காண்டீபன் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக திருகோணமலை மக்களிடம் கருத்து கோரப்பட்ட போது இலங்கையின் வரலாற்றை தமிழர்களின் வரலாறு இல்லாமல் கூறமுடியாது இவ்வாறு கூறினால் 2500 ஆண்டுகளுக்குள் சுருக்கி விட முடியும் ஆயினும் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் 5 ஈச்சரங்கள் இருந்து என்பதாக சிங்கள் வரலாற்று ஆசிரியர்களே தெரிவித்துள்ளனர்.
இதனை வழிபட்டவர்கள் தமிழர்களே எனவே இலங்கையில் தமிழர்களுக்கு 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு இருப்பதற்கு பல சான்றுகள் இன்றும் உள்ளது. எனவே வரலாறு தொடர்பாக எமது கருத்து மேலும் வலுப்பெற வேண்டும் என்று திருகோணமலை மக்கள் கருத்து தெரிவித்ததுடன் மேலும் சம்பூர் அனல் மின் நிலையத்தை நடைமுறைப் படுத்தும் போது சிங்கள மக்கள் மட்டுமல்லாது அது தொடர்பான நாட்டின் ஆதிக்கமும் கலாசாரமும் கூட திருகோணமலையை ஆக்கிரமிக்கக்கூடும் இவை எமது கலாசாரத்தில் பாதிப்பை கொண்டுவரலாம். இதனை தடுக்கும் விதத்திலும் எமது தீர்வுத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும் போன்ற கருத்துக்கள் மக்களால் முன்வைக் கப்பட்டன.