சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்க கூட்டு எதிரணி முடிவு
யோசித்த ராஜபக்ஷ கைதானதை எதிர்த்து அரச வைபவங்களை பகிஷ்கரிக்கவும் 10 இலட்சம் தேங்காய்களை உடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தவும் இருப்பதாகவும் மகிந்தவுக்கு ஆதரவான கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக சுதந்திர தின விழாவை பகிஷ்கரிப்பதாக தெரிவித்த கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி., அடுத்த வாரம் முதல் மக்களை இணைத்து எதிர்ப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாற்று எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. இதில் தினேஷ் குணவர்ன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டளஸ் அலஹப்பெரும, திஸ்ஸ விதாரண ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். சுமார் 30 ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய தினேஷ் குணவர்தன; சட்டவிரோதமாக உருவாக்கிய பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினூடாக எதிர்தரப்பினரையும் எதிர்தரப்பினருடன் தொடர்புள்ளவர்களையும் கைது செய்ய அரசாங்கம் முயன்று வருகிறது. F.C.I.D சட்டவிரோதமாக ஆரம்பித்த பிரிவாகும்.
தனது இருப்புக்காக அரசாங்கம் எதிர்தரப்பினரை கைது செய்து ஊடகங்களையும் அச்சுறுத்துகிறது. மஹிந்த ராஜபக்ஷவை அடிபணிய வைப்பதற்காக அவரின்w புதல்வரை கைது செய்துள்ளனர். இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முயல்கின்றனர். இதற்கு எதிராக மக்களை இணைத்து வெளியில் இறங்க இருக்கிறோம்.
நிதி மோசடிப் பிரிவை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும். சட்டபூர்வமான அமைப்புகளினூடாக செயற்படுவதற்கு எமது எதிர்ப்பு கிடையாது. எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எமது போராட்டத்தை ஆரம்பிப்போம் என்றார்.
விமல் வீரவங்ச எம்.பி கூறியதாவது; சட்டமா அதிபரின் ஆலோசனை இன்றி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்கப்படுகிறது. அபேகமவில் ஜனாதிபதி, சிவில் அமைப்புகள், பொலிஸ் உயரதிகாரிகள் நடத்திய கூட்டத்திலே யோசிதவை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.
எதுவித சட்டபூர்வ அடிப்படையுமின்றியே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இந்த அழுத்தங்களால் நாம் இன்னும் பலமடைந்துள்ளோம். இதற்கெதிராக சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றார்.