Breaking News

ஏழு பேரின் விடுதலைக்காக கையெழுத்துக்களைத் திரட்டும் முருகனின் தாயார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி, இலங்கையில் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி ஈடுபட்டுள்ளார்.

பளையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் எனது மகன் உள்ளிட்ட 7 பேரும் தங்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதிலும், இந்திய அரசாங்கமோ அதிகாரிகளோ அவற்றை கவனத்தில் கொள்ளாதிருப்பதனால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

ஒரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றுமொரு நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், சொந்த நாட்டு மக்கள் அவருக்காகக் குரல் கொடுப்பது உலக வழக்கம்.அந்த வகையில் இலங்கையில் உள்ளவர்கள் முருகன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்கு உதவ முன்வரவேண்டும்.

10 இலட்சம் பேர் இலங்கையில் கையெழுத்திட்டால், அதனை உள்ளடக்கி ஒரு கருணை மனுவை இந்திய அரசிடம் சமர்ப்பித்து, முருகன் உள்ளிட்டவர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோர முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், முருகனுடன் ஒன்றாகக் கல்வி கற்றறவர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த முயற்சிக்கு உதவி புரிய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.