இறுதி தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம் நாளை
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கும் வகையில் விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதிய சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழுவினர் சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
அதேநேரம் கடந்த திங்கட்கிழமை முதல் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
நேற்று முன்தினம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பையடுத்து அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த இரு கைதிகளும் தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ள நிலையில் மகசீன் சிறைச்சாலையில் உள்ள பெண் கைதியொருவர் உட்பட 14 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே மேற்குறித்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துதல், விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் விடுதலை, புனர்வாழ்வு பொறிமுறையூடாக விடுதலையளித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது. மேலும் இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.