இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தங்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர கோரியும் யாழில் மீனவர்களும், மீனவ குடும்பங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை மீனவர்களும், மீனவக் குடும்பங்களும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ். மாவட்ட செயலகத்திலிருந்து இந்திய தூதரகம் வரை பேரணியாக சென்றதுடன், அங்கு வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் செயலாளர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை இந்திய துணைத் தூதுவரிடம் கையளித்தார்.
அதேவேளை பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து இந்திய மீனவர்கள் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு தமது கடும் கண்டனத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.