யோஷிதவின் பணி தற்காலிக இடைநிறுத்தம்
நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ, கடற்படையிலிருந்து தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் கடற்படையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷ, கடற்படையின் லெப்டினண்ட் தர அதிகாரியென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யோஷிதவின் பிணை மனு கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட்டபோது, பிணை நிராகரிக்கப்பட்டதோடு குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சீ.எஸ்.என் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில், யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி பொலிஸ் நிதிமோசடி தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். குறித்த ஐவர் சார்பில், கடந்த 17ஆம் திகதி மஹிந்த மற்றும் அவரது சட்டத்தரணி மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.