இன்றுடன் நிறைவடையும் நிபுணர்குழுவின் பணிகள்
அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இறுதிநாளான இன்று அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள் இடம் பெறும் என நிபுணர் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிபுணர்குழு கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கொழும்பு மாவட்டத்தில் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
இந்த காலப்பகுதியில் நாங்கள் எதிர்பார்த்ததையும் விட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அந்தவகையில் மின்னஞ்சல் மூலமாக 400க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 140பேர் எழுத்துமூலமும் 70பேர் பெக்ஸ் ஊடாகவும் யோசனைகளை தெரிவித்திருந்தனர். 258பேர் நேரடியாக எங்கள் முன்தோன்றி தங்களது கருத்துக்களை மிகவும் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 20பேரும் ஒன்றாக இருந்து பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டோம். பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நாங்கள் 5குழுக்களாக பிரிந்து ஒரு மாவட்டத்துக்கு 2நாட்கள் வீதம் ஒதுக்கி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அத்துடன் மூன்று மாதங்களுக்குள் இதுதொடர்பான பூரண அறிக்கையொன்றை அரசியலமைப்பு குழுவுக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.
பொதுமக்கள் அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கும்போது, மத சுதந்திரம், தேர்தல் முறை, மக்களின் அடிப்படை உரிமை, கருத்து சுதந்திரம் போன்ற 27 தலைப்புகளில் கருத்துக்களை பதிவுசெய்துகொண்டோம். அத்துடன் இந்த காலப்பகுதில் மதகுருமார், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரையும் சந்தித்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டோம்.
அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் இறுதி நாளான இன்று அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாட்டங்களில் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைக்காத அரசியல் கட்சிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் பலர் மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க மார்ச் மாதம் இறுதிப்பகுதியில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளோம் என்றார்.