காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று சாவகச்சேரியில்
யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை, மூன்றாவது நாளாக இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் நடைபெறும் இந்த சாட்சியப்பதிவிற்காக, 205 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சாட்சியப்பதிவானது, மாலை 5.30 மணிவரை இடம்பெறுமென ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று வேலணை பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுப்பட்ட சாட்சியப்பதிவில், 229 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு, பதிதாக கிடைக்கப்பெற்ற 70 முறைப்பாடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணைகளின்போது, இலங்கை படையினர் மற்றும் ஈ.பி.டி.பியினர் மீது அதிக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மூன்றாவது கட்டமாக யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விசாரணையின் இறுதிநாளான நாளைய தினமும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.