தீர்வின்றி தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்
விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் சில வருடங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள 14 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், அவர்களுள் ஒருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 13 பேரில் நால்வர், உடல் நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலைக்கு திரும்பி மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த கைதிகள் தமக்கான வைத்திய தேவைகளையும் நிராகரித்துள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் நேற்று (சனிக்கிழமை) சென்று பார்வையிட்டதோடு, கைதிகள் விடுவிக்கப்படாமைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளே காரணமென குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றமின்றி தடுப்புக் காவலில் வைத்திருப்பது மனித உரிமை மீறலாகுமென குறிப்பிட்ட அவர், நீதிமன்றங்களிலும் நம்பிக்கையற்ற நிலையில், தற்போது அரசியல் கைதிகள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தலையிட்டு அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அதுவே இனங்களுக்கிடையில் நல்லுறவையும் அரசியல் தீர்வுக்கு வழியையும் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளார்.