பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஏன் அவசரப்படுகிறது இந்தியா? -சத்ரியன்
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான
நிலையமாக விரிவாக்கும் திட்டத் தைச் செயற்படுத்துவதில், அரசாங்கம் மட்டு மன்றி இந்தியாவும் கூட, அதிகளவு ஆர்வத் தைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த விடயத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கடந்தவாரம் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கூறியிருந்தார், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.
அவரது இந்தக் கருத்து, வடக்கு மாகாணத் தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாக கட்டமைப்பு இருக்கின்ற போது, அதன் கருத்துக்களைப் புறக்கணித்துச் செயற்படுகின்ற முன்னுதாரணமாக இந்த விவகாரம் மாறிவிடும் சூழலையே பிரதிபலித்திருக்கிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பன மத்திய அரசின் அதிகார எல்லைக் குள் தான் வருகின்றன. எனவே, விமான நிலைய விரிவாக்கத்தில், மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை மத்திய அரசாங்கமே முடிவுகளை எடுக்கலாம் என்பது உண்மை தான்.
ஆனாலும், மத்திய அரசுடன் மாகாண அரசாங்கம் இணைந்து பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், இந்த விடயத்தில் எதிர்மறையாகச் சிந்திக்கத் தலைப்படுவது அபத்தமானது.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடத்தப்பட்ட வடக்கின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தின் போதே, பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு, எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
முதலில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பின்னரே விமான நிலைய அபிவிருத்தி பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்குப் பின்னர் தான், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடக்கின் முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும், கிட்டத்தட்ட இந்தத் திட்டம் கைவிடப்படாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனினும், முதலமைச்சரின் கரிசனைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது, தனியே அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயம் மட்டுமல்ல. அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் காலம்காலமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரமாகவும் உள்ளது. அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களை அகதி முகாம்களில் குடியமர்த்தி விட்டு விமான நிலையத்தை அமைப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெற்று விட முடியுமா என்ற கேள்வியே இப்போது எழுப்பப்படுகிறது.
அதைவிட, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு முதலமைச்சர் மட்டுமன்றி, அனைத் துக் கட்சிகளின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுமே எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்த சமூகமும் இந்த திட்டத்தை எதிர்த்து நிற்கின்ற ஒரு சூழலில் தான் அத னைப் புறக்கணித்துக் கொண்டு, பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைத் தொடரும் எத்தனிப்பில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
இந்த திட்டத்தை மேற்கொள்வதில் இந்திய அரசாங்கமும் தொடர்புபட்டுள்ளது, இந்த விவகாரத்தை இன்னும் சிக்கலானதாக மாற்றியிருக்கிறது. இந்தியா இந்த விடயத்தில் தொடர்புபட்டிருப்பதால், இலங்கை அரசாங்கத்தின் நிலை பலமாக இருக்கிறது என்பது உண்மையே. இந்தியா இந்த விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை தனது வர்த்தக மற்றும் பாதுகாப்பு நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே முற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கொழும்பு வந்திருந்த போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கம் செய்வதன் மூலம், தென்னிந்திய நகரங்களுக்கான விமான சேவைகளை மேற்கொள்ளலாம் என்பதே இரு நாட்டு அரசாங்கங்களினதும் திட்டம்.
தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவை களை விரிவாக்குவதன் மூலம், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கலாம் என்றும் வர்த்தக தொடர்புகள் அதிகரிக்கும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது. அதைவிட, பலாலி விமான நிலையத்தை எந்தவொரு அவசர தேவைக்கும் பயன்படுத்தக் கூடியதான தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் இந்தியா விரும்புகிறது.
ஏற்கனவே, சந்திரிகா குமாரதுங்க ஆட்சி யில் இருந்த காலகட்டத்திலும், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதைகளை தரமுயர்த்திக் கொடுத்திருந்தது இந்தியா. இப்போது அதன் அடுத்தகட்டமாக, இராணுவ விமான நிலையமாக உள்ள பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக மாற்ற- அதன் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கான உதவியை இந்தியாவே வழங்கப் போகிறது.
இதுகுறித்து ஆராய்வதற்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் விரை வில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளது. இப்படியான சூழ்நிலையில் தான் வடக்கு மாகாணசபையிடம் இருந்தும் தமிழ் மக்களிடம் இருந்தும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. ஆனால், இந்தியாவோ இலங்கையோ இந்த எதிர்ப்பை எந்தளவுக்கு கவனத்தில் கொண்டு செயற்படப் போகின்றன என்பது கேள்விக்குரிய விடயம்.
ஏனென்றால், இரண்டு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இந்த திட்டம் தேவையாக உள்ளது. இந்தக் கட்டத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பையோ, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் எதிர்ப்பையோ கண்டுகொள்ளும் நிலையில் இருநாடுகளும் இல் லைப் போலவே தெரிகிறது.
பலாலி விமான நிலையத்தை விரிவாக்கி, வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த முனையும் இந்தியா, ஏன் இன்னமும் கப்பல்வழிப் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறது? கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியப் பி்ரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த காலகட்டத்தில், தலைமன்னார் – தூத்துக்குடி கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த உடன்பாடு ஒன்றைக் கையெழுத்திட புதுடில்லி அவசரமாக அழுத்தம் கொடுத்தது.
ஆனால், தலைமன்னார் இறங்குதுறையில் போதிய வசதிகள் இல்லை என்றும், அங்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்த பின்னர் குறுகிய காலத்தில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கலாம் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியது. பயணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பதாக நரேந்திரமோடியின் பயணத்தின் போது இணக்கப்பாடு காணப்பட்டது.
இந்த இணக்கப்பாடு ஏற்பட்டு ஒருவருடமாகியுள்ள நிலையிலும் கூட, தலைமன்னார்- தூத்துக்குடி கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு அவசரம் காட்டாத இந்தியா, பலாலி விமான நிலைய விரிவாக்கத்தில் மட்டும் கூடுதல் அக்கறை கொள்வது கேள்விகளை எழுப்ப வைக்கிறது.
தமிழ் மக்களின் நலன்களைப் புறக்கணித்து இந்தியா இந்த விடயத்தில் தனது நலனை முன்னிலைப்படுத்த முனைகிறதா என்ற சந்தேகங்களும் எழுகிறது.
இந்த விடயத்தில் இந்தியா எடுக்கும் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படும்.
ஏனென்றால், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தியா மாகாணசபை முறையை 13ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கிக் கொடுத்தது.
இன்னமும் கூட, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பகிர்வு 13ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றே இந்தியா கூறி வருகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் கருத்துக்களை புறக்கணித்து இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுக்க முனைந்தால், அது 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடான அதிகாரப் பகிர்வையும் கேள்விக்குள்ளாக்கும்.
அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் மத்திய அரசுடன் இணைந்து மாகாணசபை செயற்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்ப்பதன் பின்னணி, இதுபோன்ற சிக்கலைக் கையாள்வதற்கான உத்தியா என்றும் கூடச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரத்தின் மீது தான் கட்டியெழுப்பப்படும் என்றால், அந்த திட்டத்தை தோற்கடிக்கும் வழிமுறைகள் பற்றியும் தமிழ் மக்கள் சிந்திக்க முற்படுவதில் தவறில்லை.