சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித – பார்வையிட்டார் மைத்திரி
சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பார்வையிட்டார்.
நேற்றுக்காலை திடீரென சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டார்.
நேற்றுமுன்தினம் ராஜித சேனாரத்னவுக்கு இரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் 48 மணிநேரத்தில், தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாற்றப்படுவார் என்றும் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் துமிந்த திசநாயக்கவும், எலிசபெத் மருத்துவமனைக்குச் சென்று ராஜித சேனாரத்னவைப் பார்வையிட்டார்.அதேவேளை ராஜித சேனாரத்னவைப் பார்வையிடுவதற்காக அமைச்சர் சரத் பொன்சேகாவும், நேற்று மாலை சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.
அதேவேளை, ராஜித சேனாரத்னவை பார்வையாளர்கள் சந்திப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.