ஜனாதிபதி ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக கண்டனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர் கருணாதிலக அமுனுகம, இலங்கை வெளிவிவகார அமைச்சினால் கண்டிக்கப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனி சென்றிருந்த போது, திருப்திப்படும் வகையில் பயண ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இதுபற்றிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையிலேயே, ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர் கருணாதிலக அமுனுகம கண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதியுடன் சென்றிருந்த அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், அணிவகுப்பு மரியாதையின் போது, ஜேர்மனி ஜனாதிபதி மற்றும் இலங்கை ஜனாதிபதியை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போது, ஜேர்மனி ஜனாதிபதி ஏற்சலா மார்க்கெல் அவரை விலகுமாறு அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.