வவுனியா மகாறம்பைக்குளம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
வவுனியா – மகாறம்பைக்குளம் கிராம மக்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டம் இன்று சனிக்கிழமை பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மகாரம்பைக்குளம் கிராம சேவகரின் அலுவலகம் கடந்த 23 ஆம் திகதி இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. இதனைக் கண்டித்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.
அத்தோடு, குறித்த கிராம சேவகரின் கடமையினை மேற்கொள்ள இடையூறு விளைவித்ததாக தெரிவித்து கடந்த 24 ஆம் திகதி கிராம சேவகர்கள் வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.
இதன்போது தனிநபர் கைகளுக்கு எப்படி வந்தது துப்பாக்கி, குற்றவாளிகளை கைது செய்ய கிராம சேவகரை சேவைக்கு அனுப்பு, மக்களின் அச்சமற்ற வாழ்வுக்கு வழிகோருங்கள்,
ஏன் இந்த வெறியாட்டம்? யார் இதற்கு துணை, அரச உடமைகளை அடித்து நொருக்கிய அரக்கர்களை கைது செய் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.இந்த நிலையில் அந்த பகுதி கிராம சேவகர் வவுனியா பிரதேச செயலகத்தின் வெளியில் மக்களுக்கான சேவையினை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.