பொது மன்னிப்பு வேண்டாம்! பிணை வழங்குங்கள் - அரசியல் கைதிகள் கோரிக்கை
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுடன் கலந்துரையாட உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.
இன்று பகல் 12.30 மணியளவில் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, தமக்கு பொது மன்னிப்பு வேண்டாம் என்றும் தம்மீது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் தமக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யவோ அல்லது தம்மை பிணையில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்குமாறு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுடன் கலந்துரையாடி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குறிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.
இதேவேளை அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் இருவரும் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இது தவிர கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 13 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.