ஓரிரு மாதங்களுக்குள் சம்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப்பணிகள் ஆரம்பம்
சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
”இந்த திட்டத்துக்கான எல்லா சட்ட ரீதியான அனுமதிகளும் பெறப்பட்டு விட்டன. சுற்றுச்சூழல் அமைப்புகள், கிராமவாசிகளினதும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் இருந்து கடந்த 2ஆம் நாள் சுற்றாடல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்துள்ளது,2020ஆம் ஆண்டு மின்சார உற்பத்தியை ஆரம்பிக்கும் வகையில் இந்த அனல் மின் நிலையத்தைக் கட்டி முடிப்பதற்கான கேள்விப்பத்திரங்களை அமைச்சு கோரவுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்கள் அடுத்த சில மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும்.சம்பூரில் 500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், இந்த அனல் மின் நிலையம் 600 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படும்.
தலா 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டதாக இரண்டு கட்டங்களாக இந்த 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம், அமைக்கப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.