அரசியல் தீர்வு குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு
புதிய அரசியலமைப்பில் தேசிய பிரச்சினைக்கான தீர்வை எட்டுவது தொடர்பிலும் நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குவது குறித்தும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாகவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதான இரண்டு கட்சிகளும் கலந்தாலோசிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சி தெரிவித்தது.
மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள், மக்களின் அடிப்படை பிரச்சினைகள், தேசிய பிரச்சினைக்கு தீர்வு எட்டுதல் உள்ளிட்ட அனைத்து பிரதான பிரச்சினைகளுக்கும் இந்தஆட்சியிலேயே தீர்வு எட்டப்படுமாயின் அதுவே எமது நல்லாட்சியின் அடையாளமாகும்.அதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தரப்பில் ஒன்பது யோசனைகளை கடந்த பாராளுமன்ற செயலமர்வில் முன்வைத்திருந்தோம். இந்த யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி பரிசீலனை செய்து தமது தரப்பு தீர்மானத்தை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தோம். அந்த நிலையில் நாம் கொண்டுவந்த அனைத்தையும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுகொள்வதாக சபையில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதில் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவின் யோசனைகளையும் அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லாது செயற்படும் உறுப்பினர்களின் கருத்தை ஆராயும் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவின் தீர்மானத்தையும் உள்ளடக்கிய வகையிலேயே இது உள்ளது.
அதேபோல் நேற்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினருடனும் அதேபோல் பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போதும் சாதகமான வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதான பிரச்சினைகளை தீர்ப்பதில் கடந்த காலத்தில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும், அதிகார பரவலாக்கல் தொடர்பிலும், தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவரும் திட்டத்திலும் ஆலோசனைகள் முன்வைத்த நிலையில் எந்த கட்சியும் இணக்கப்பாட்டை எட்டவில்லை. பிரதான கட்சிகளில் ஏதாவது ஒன்று முழுமையாக எதிர்ப்பை தெரிவிக்கும்.
மஹிந்த அரசாங்கத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தெரிவுக்குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் முரண்பட்டு நின்றனர். அதேபோல் அதற்கு முன்னரும் பல முரண்பாடுகள் இருந்தன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்த முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன. ஆனால் இப்போது அவ்வாறு அல்லாது பிரதான இரண்டு கட்சிகளும் கலந்துரையாடி பூரண ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் அடுத்தகட்ட நடவைக்கைகளை மேற்கொள்ளும் செயன்முறைகள் தொடர்பில் ஆராய தயாராக உள்ளோம்.
அதன் பின்னரே எவ்வாறான அரசியல் வரைபை உருவாக்கப் போகின்றோம் என்ற தீர்மானம் எட்டப்படும். எனினும் எமக்கு இப்போது தேர்தல் திருத்தம் மிகவும் அவசியமாகின்றது. அதன் அடிப்படையில் தான் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதா அல்லது தக்கவைப்பதா என்ற தீர்மானத்தை எடுக்க முடியும் என நினைகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த போதும் மஹிந்த ராஜபக் ஷ அதிகாரத்திற்கு வந்த போதும் அரசியல் அமைப்பு திருத்தம் என்ற காரணத்தை தான் முன்வைத்தோம். அதற்காகவே மக்கள் வாக்களித்தனர். ஆனால் தேர்தல் முறைமை மாற்றம் என்ற விடயத்தை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே தேர்தல் முறைமை மாற்றத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவதா இல்லையா என்ற தீர்மானத்தை எட்டமுடியும்.
ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்க முன்னர் பாராளுமன்ற அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும். ஆகவே தேர்தல் முறைமை மூலம் வரும் விளைவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட தீர்மானம் எடுக்கப்படும். அதே நிலையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் அரசியலமைப்பு ரீதியில் தீர்வு ஒன்றை எட்ட முடியுமாக இருந்தால் அதுவே பலமாக அமையும். மீண்டும் பிரபாகரன் போன்ற எவரும் உருவாக எந்த வாய்ப்புகளும் அமையாது என நம்புகின்றோம்.
ஆகவே இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு பிரதான இரண்டு கட்சிகளும் கலந்துரையாடி தீர்வை காண முடியும். இந்த பிரச்சினைகளை இந்த பாராளுமன்றத்தில் தீர்க்க வேண்டும். மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட அனைத்து பிரதான பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படுமாயின் அதுவே எமது நல்லாட்சியின் அடையாளமாகும். ஆகவே இந்த அரசாங்கத்தில் அனைத்து பிரதான பிரச்சினைகளுக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்வு காணப்படும்.