சிங்கள தலைவர்களை நம்ப தமிழ் மக்கள் தயாராக இல்லை - சிவசக்தி ஆனந்தன்
அரசியல் நிர்க்கதியிலேயே தமிழ் மக்கள் உள்ளனர். எந்தவொரு சிங்களத் தலைவர்களையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், தமிழ் மக்கள் தற்போது அரசியல் அனாதைகளாகவே உணர்கிறார்கள். சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட நிலைகளில் இருந்து விடுபடக்கூடிய ஏது நிலைகள் எதுவும் நல்லாட்சியில் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.
உள்நாடும் சர்வதேசமும் கைவிட்ட நிலையில் அரசியல் நிர்க்கதியில் தமிழ் மக்கள் இருக்கின்றனர். பல்லினங்களையும் வழிநடத்தும் அரசியல் சிற்பிகள் சிங்கள தலைமைகளாக இதுவரை வாய்க்கப்பெறவில்லை. சிங்களத்தலைவர்களின் அரவணைப்புக்களெல்லாம், அனைத்துக் கெடுக்கும் கொள்கையைக் கொண்டவை.
புதிய அரசியல் யாப்பு என இப்போது பேசும் எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களையும் நம்பும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. தம்மை நிரூபிக்க சிங்களத் தலைவர்கள் வெகு தூரம் பயணிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த எந்தவொரு உறுதிமொழியையும் கடந்த ஒருவருடத்தில் அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை.- என்றார்.