Breaking News

வவுனியா மாணவி கொலைக்கு நீதி கோரி இன்று வடக்கில் பணிநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு நீதிகோரியும், இன்று வட மாகாணத்தில், இரண்டு மணிநேர பணிநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். வணிகர் கழகம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், என்பன இந்த பணிநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

வவுனியா உக்கிளாங்குளத்தில் கடந்த 16ஆம் நாள், வீட்டில் தனித்திருந்த பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எமது பிரதேசங்களில் நடைபெறும் வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும், அரக்கத்தனங்களுக்கும் இது வரை எந்த நீதியும் கிடைத்ததில்லை.

அகிம்சைவழியில் நாம் செய்கின்ற எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் இதுவரை பயனைத் தந்ததில்லை. காலம் காலமாக நாம் அனுபவித்து வருகின்ற துன்பங்களும், துயரங்களும் சொல்லில் அடங்காதவை.

இதற்காக நாம் எத்தனை வடிமான போராட்டங்களை முன்னெடுத்தோம். அவற்றுக்கெல்லாம் இன்று வரை நீதியான எந்தத் தீர்வுகளும் கிடைக்கவில்லை.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்தும், நீதி வழங்குமாறு கோரியும் பிரமாண்டமான ஒன்று கூடல் முன்னெடுக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கானவர்கள் அதில் பங்கேற்றனர்.

வடபுலம் முழுவதும் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டு நீதிகேட்டு ஆர்ப்பரித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நீதி கிடைக்கவில்லை.மாணவர்கள் மீதான வன்புணர்வு கொலைகள் நடந்தவண்ணம் உள்ளன. சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி தாம் நினைத்ததைச் செய்யும் துஷ்டர்கள் இந்த நாட்டில் உள்ளவரை எமக்கு நீதி கிடைக்கப் போவதில்லை.

ஆனாலும் அகிம்சை வழியை நாம் கைவிடக்கூடாது என்பதற்காக இன்று நடைபெறவுள்ள பணிநிறுத்தப் போராட்டத்துக்கு எமது சங்கம் முழு ஆதரவை வழங்குவதோடு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஆளணியினர், மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் காலை இரண்டு மணிநேரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணி நிறுத்தப் போராட்டத்துக்கு யாழ் வணிகர் கழகமும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், வணிகர்களை இன்று காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 10.00 மணி வரை மட்டும் கடைகளை மூடி, அமைதியான முறையில் தங்கள் கண்டனத்தை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேவேளை, மாணவி ஹரிஸ்ணவிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் வழங்கக் கோரி நேற்று வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும், வீதிமறிப்புப் போராட்டம் இடம்பெற்றது. இதில் பெருமளவு பொதுமக்கள், பங்கேற்றனர். மாணவர்களும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.