Breaking News

ஹரிஷ்ணவிக்காக மௌனித்தது வட மாகாணம்

வவுனியாவின் அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி கோரி, வடக்கில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் வட மாகாணத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பேரூந்து சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், யாழ் ஆசிரியர் சங்கம், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வணிகர் சங்கத்தினர் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் என்பன இணைந்துள்ளன.

இன்றைய போராட்டத்தால் வட மாகாணத்தின் எந்தவொரு பாடசாலையும் மூடப்பட மாட்டாதென தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையில் பரீட்சைகள் நடைபெறுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி கோரி, நாளைய தினம் மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய மாணவியான ஹரிஷ்ணவி, கடந்த 16ஆம் திகதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபர் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், நாடளாவிய ரீதியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த நாசகார சம்பவம் தொடர்பாக, நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் பேசப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.