கூட்டமைப்பிடம் தரமான திட்ட வரைவு - சபையில் அறிவித்தார் செல்வம்
நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு காண்பதற்கான தரமான வரைவு தயாராகவுள்ளது.
தற்போது அதனை வெளிப்படுத்தினால் கடும் போக்காளர்கள் தவறாக பயன்படுத்தி இலாபம் அடைந்து விடுவார்கள் என்பதற்காகவே இரகசியம் காக்கப்படுவதோடு இராஜதந்திரமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையாக பாராளுமன்றம் மாற்றியமைப்பது குறித்த விவாதத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை தேசிய இனங்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்கு முறைக்குள் வைக்கப்பட்டிருந்தார்கள். குறிப்பாக கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க வேண்டுமென கருதினார்கள். எமது நிலங்கள் சூறையாடப்பட்டன, அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டார்கள், காணாமல் போனோர் விடயம் தொடர்கதையாகவே இருந்தது.
இவ்வாறான இன்னல்களுக்கு மத்தியில் நெருக்கடிகளுக்குள் இருந்த மலையக, முஸ்லிம், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில், நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு காண்பதற்கான தரமான வரைபு தயாராகவுள்ளது. தற்போது அதனை வெ ளிப்படுத்தினால் கடும் போக்காளர்கள் தவறாக பயன்படுத்தி இலாபம் அடைந்து விடுவார்கள் என்பதற்காகவே இரகசியம் காக்கப்படுவதோடு இராஜதந்திரமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்றார்.