இந்தியாவுடன் திருட்டுத்தனமாக உடன்பாடு செய்து கொள்ளமாட்டோம்- ரணில்
அடுத்தமாதம் முதல்வாரம் கொழும்பு வரவுள்ள இந்தியக் குழுவுடன் நடத்தப்படும் பேச்சுக்களை அடுத்தே, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கான வரைவு தயாரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இது தொடர்பான சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
‘ பத்து இலட்சம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக எமது சந்தை வாய்ப்புக்களை விரிவாக்க வேண்டும். ஐரோப்பா, இந்தியா, சீனா, சிங்கப்பூர், துருக்கி போன்ற நாடுகளில் உள்ள சுமார் ஒரு பில்லியன் மத்தியதரப்பினருக்கு எமது உற்பத்திகள் சென்றடைய திட்டமிட்டிருக்கிறோம்.
இதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக, தொழில்நுட்ப துறைசார் உடன்பாடுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். எமக்கு கிடைத்த மக்கள் ஆணையின் படி ஐரோப்பிய சந்தைக்குள் நுழையவும் இந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டில் கைச்சாத்திடவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சீனா, சிங்கப்பூர், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு பேச்சு நடத்தி வருகிறோம்.உலகில் பல்வேறு நாடுகளுடன் நாம் மேற்கொள்ளவிருக்கும் உடன்பாடு குறித்து எவரும் அஞ்சத்தேவையில்லை. நாட்டின் நலன் கருதியே நாம் இவற்றை மேற்கொள்கிறோம்.
இந்தியாவுடன் செய்து கொள்ளவிருக்கும் உடன்பாடு குறித்து சில தரப்பினர் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இதுவரை வரைவு எதுவும் தயாரிக்கப்படாத பேச்சு மட்டத்தில் உள்ள விடயமொன்று குறித்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
1998ஆம் ஆண்டு இந்தியாவுடன் சுதந்திர பொருளாதார உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. இதனூடாக எதிர்பார்த்த பலனை அடைய முடியாததால் கடந்த அரசாங்கம் சீபா உடன்பாட்டை முன்னெடுக்கத் திட்டமிட்டது.
இதில் சேவைத்துறை உள்ளடக்கப்பட்டிருந்ததால் நாம் அதனை எதிர்த்தோம். கடந்த ஆண்டு ஜனவரி எட்டாம் நாளின் பின்னர் உருவான புதிய அரசாங்கம் சீபா உடன்பாடு குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியது.
இந்தியப் பிரதமருடனான பேச்சுக்களைத் தொடர்ந்து சீபா உடன்பாட்டை கைவிட்டு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
2016ஆம் ஆண்டு நடுப் பகுதியில் இந்த உடன்பாடு கைச்சாத்திட உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் படி, நாம் வரைவு ஒன்றை தயாரித்து வருகிறோம்.இந்தியத் தரப்பு வரைவும் தயாரான பின்னர் இறுதி உடன்பாட்டைத் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த உடன்பாடு சீபாவைவிட சிறந்ததாக அமையும்.
சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் ஊடாக இலங்கைக்கு வரிச்சலுகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. புதிய உடன்பாட்டின் ஊடாக சகல பாதகமான விடயங்களையும் மாற்ற எதிர்பார்க்கிறோம்.சீபா உடன்பாட்டில் இருந்த சுதந்திரமான பயண அனுமதி புதிய உடன்பாட்டில் நீக்கப்பட்டுள்ளது. இதனூடாக எந்த வெளிநாட்டவர்களுக்கும் சிறிலங்காவில் தொழில்புரிய இடமளிக்கப்படமாட்டாது.
புதிய உடன்பாட்டின் மூலம் இலங்கையருக்கு கூடுதல் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும். தற்பொழுது கிடைப்பதைவிட கூடுதலான சம்பளம் கிடைக்கும்.எதிர்வரும் மார்ச் 4ஆம் நாள் இந்தியக்குழு இலங்கைbவரவிருக்கிறது. இந்தக் குழுவுடனான பேச்சுக்களை தொடர்ந்து இறுதி வரைவு தயாரிக்கப்படும்.
புதிய உடன்பாட்டின் இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுடனான உடன்பாட்டு கைச்சாத்திடப்படும்.
இதனை நாம் திருட்டுத்தனமாக செய்யமாட்டோம். சகல தரப்பினருடனும் பேச்சு நடத்தி வெளிப்படைத் தன்மையுடனேயே இதனை முன்னெடுப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.