Breaking News

21 முறை ஏமாந்த தமிழ் இனம்,எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் ஏமாறலாமா…?


இதுவரை தமிழர் தொடர்பான 21.படிநிலைகளில் பேச்சு வார்த்தையும் ஒப்பந்தங்களும் நடந்துள்ளது இதில் தமிழர்களுக்குச் சாதகமான ஒரு நகர்வும் நடக்கவில்லை மாறாக லட்ச்சக் கணக்கில் தமிழினம் அழிந்ததுதான் மிச்சம்.அதில் சிங்களவரும் புத்தரும் வடக்குக் கிழக்கில் குடிஏறியதே வரலாறு.வளரும் நம் இளம் தலை முறை இதை நன்கு சிந்திக்கவும்.

ஒரு தலைமுறை கடந்தும் இப்போதுள்ள தலைமுறை இந்த விடயங்களைத் தெரிந்து நமது போராட்டத்தை முன்னெடுக்கவும் புலம் பெயர்ந்து வாழும் இளம் தலை முறையும் இதைக் கொண்டு முன்செல்லும் நோக்குடன் இக்கட்டுரை எழுதப் படுகிறது,

எப்போவோ நிறைவேற வேண்டிய தமிழரின் போராட்டங்களும் முஸ்லிம் தலைவர்களால் தென் கிழக்கு அலகு என உருமாறி முறியடிக்கப்பட்டதே வரலாறாகும்.இனிமேலும் உள்ள நகர்வுகளில் நம் தலைமுறை இடறிவிடக் கூடாது என்பதே எனது நோக்கம்.அன்புடன் (Markkandu Devarajah,L,L,B) Switzerland,

1-1929 டொனமூர் சீர்திருத்தம் – சேர் பொ. இராமநாதனுக்குத் துரோகம்.
2-1930 இலங்கைத் தேசிய காங்கிரஸ் சேர் பொ. அருணாசலம் நீக்கம்.
3-1931 தேர்தல் – சிங்களவர் பங்களிப்பு, யாழ்ப்பாணத் தமிழர் புறக்கணிப்பு.
4-1935 மானிப்பாய் – மகேந்திரா உடன்பாடு. இலங்கை தேசிய காங்கிரஸ் கைவிடல்.
5-1948 டி. எஸ். சேனநாயக்கா துரோகம். சுந்தரலிங்கம் வெளியேறல்.
6-1948 குடியுரிமை பறிப்பு. செல்வநாயகம் முதலானோர் வெளியேறல்.
7-1955 கொக்குவில் வாக்குறுதி. கொத்தலாவலை கைவிரிப்பு
8-1957 பண்டா செல்வா உடன்பாடு. பண்டாரநாயக்கா கைவிடல்.
9-1960 சிறீமாவுடன் பேச்சு தோல்வி.
10-1965 டட்லி- செல்வா உடன்பாடு. டட்லி கைவிடல்.
11-1971 வல்வை-அனைத்துத் தமிழ்க்கட்சிகளின் பேச்சு அழைப்புக்குச் சிறீமாவோ மறுப்பு
12-1980 மாவட்ட வளர்ச்சிச் சபை. நீலன் திருச்செல்வத்தின் அறிக்கையை ஏற்றுப்
பின் ஜெயவர்த்தனா கைவிடல்.
13-1983 ஜி. பார்த்தசாரதி உதவியுடன் பேச்சு. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கைவிரிப்பு.
14-1985 திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி.
15-1987 ஜெயவர்த்தனா-ராஜீவ் உடன்பாடு. பிரேமதாசா கைவிடல்.
16-1988 குடியுரிமை. ஜெயவர்த்தனா-தொண்டமான் உடன்பாடு நடைமுறையில்.
17-1989 பிரேமதாசா-பாலசிங்கம், யோகி கொழும்புப் பேச்சு. தோல்வி.
18-1995 பாலபத்தபெந்தி – பாலசிங்கம் யாழ்ப்பாணம் பேச்சு. தோல்வி.
19-1999 ஜி.எல். பீரிஸ்-நீலன் திருச்செல்வம் வரைவுகள். சந்திரிகா கைவிடல்.
20-2002 மாசி: நோர்வே மூலம் புரிந்துணர்வு உடன்பாடு. நடைமுறையில்.
21-2002 புரட்டாதி: தாய்லாந்தில் பேச்சுத் தொடக்கம்

அதன்பின் அரசினால் பாராளுமன்றில் 10 க்கும் மேற்ப்பட்ட ஆணைக்குழுக்கள் உருவாக்கி காலத்தைக் கடத்தி அவர்களின் குப்பைக் கூடத்தில் சங்கமம் ஆகின என்பது இப்போதயவரலாறு,

சிங்களவர் – ஈழத்தமிழர் அரசியல் உடன்பாட்டுக்குச் சட்ட வலிவு கொடுப்பது கொழும்பு நாடாளுமன்றமே.

1957 ஆடியில் எழுதிய பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்பாட்டை 1958 மாசியில் ஒருதலையாகப் பண்டாரநாயக்கா கைவிட்டார். நாடாளுமன்றத்துக்குச் சட்டமாக்க அவ்வுடன்பாடு வரவேயில்லை

1965 பங்குனியில் டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் உடன்பாடு வந்தது. 1968 வரை அந்த உடன்பாட்டைச் சட்டமாக்கும் முன்வரைவுகளை மு. திருச்செல்வம் தயாரித்து வந்தாலும் அவை நாடாளுமன்றத்துக்கு வரவேயில்லை.

1987 ஜெயவர்த்தனா – ராஜீவ் உடன்பாட்டின் சட்ட வடிவமே கொழும்பு நாடாளுமன்றம் நிறைவேற்றிய அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம். 1988இல் சட்டமாகிய அந்த உடன்பாடு தமிழருக்கு எந்தவித நன்மையையும் தரவில்லை என்பதால், 1989 பங்குனியில் தமிழர் பகுதிக்கான வடகீழ் மாகாண அவை கூடி, சிங்களவர் – ஈழத்தமிழர் முரண்பாட்டைத் தீர்க்க ஒரே வழி தமிழீழம் அமைப்பதே என்ற கருத்தைத் தீர்மானமாக்கிவிட்டுத் தன்னைத் தானே கலைத்துக்கொண்டது. அவை உறுப்பினர் பலர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

காரிருளில் மின்னல் கீற்றாக, 1988இன் ஜெயவர்த்தனா – தொண்டமான் உடன்பாடு சட்டமாகி, மலையகத் தமிழர் எவரும் குடியுரிமை பெறும் எளிதான வழியாக இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

1994 முதல் 1999 வரை சந்திரிகா அரசுடன், விடுதலைப் புலிகள் தவிர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து பேசின. அரசியலமைப்பை முற்றுமுழுதாக மாற்றியமைக்கும் வரைவுகளுக்கு உடன்பட்டன. அரசியலமைப்பு வல்லுநர்களான ஜி. எல். பீரிஸ், நீலன் திருச்செல்வம் ஆகியோர் இந்த வரைவுகளைத் தயாரிப்பில் பெரும் பங்காற்றினர். ரணில் கட்சியினரின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத சந்திரிகா, அந்த வரைவுகளை நாடாளுமன்ற விவாதத்துக்குக் கொண்டுவரவில்லை.

கொழும்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசைகளில் அமரும் சிங்கள அரசியல் கட்சி எதுவானாலும், தாய்லாந்தில் ஏற்படக்கூடிய சிங்களவர் – ஈழத்தமிழர் உடன்பாட்டைச் சட்டமாக்குவதற்குத் தேவையான ஆதரவைக் கொடுக்காது என ஜெயதேவா உயங்கோடு கூறியுள்ளார். அமைதித் தீர்வு விரைவில் திரும்ப வேண்டும் என உணரும் சிங்களக் கல்விமானான ஜெயதேவா, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறைப் பேராசிரியர்.

இன்றைய நாடாளுமன்றத்தில் ரணிலின் அணிக்குச் சாதாரண எண்ணிக்கைப் பெரும்பான்மையே உண்டு. மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கைப் பெரும்பான்மையுடன் மட்டுமே அரசியலமைப்பைத் திருத்த முடியும். எதிர்க் கட்சிகளான சிங்களக் கட்சிகள் ஆதரவின்றிச் சிங்களவர் – ஈழத்தமிழர் உடன்பாடு சட்ட வலிமை பெற முடியாது. இதையே ஜெயதேவா உயங்கோடு கூறியுள்ளார்.

சட்ட வலிவு இல்லாமலே நார்வேயின் துணையுடன் புரிந்துணர்வு உடன்பாடு நடைமுறையில் . கொழும்பு அரசின் கட்டுப்பாட்டு எல்லைகள் சுருங்கியதை இப்புரிந்துணர்வு உடன்பாடு ஏற்றுக் கொள்கிறது. வடகீழ் மாகாணத்தின் பெருமளவு நிலப்பகுதிகளில் கொழும்பு அரசின் கோன்மை செயல்நிலையில் இல்லை. அப்பகுதி ஈழத்தமிழர் கட்டுப்பாட்டில் உள்ளதே இப்புரிந்துணர்வு உடன்பாடு கூறும் மெய்நிலை.

சிங்களவர் தாயகத்தில் சிங்களவர் அரசு, தமிழர் தாயகத்தில் தமிழர் அரசு. இரண்டையும் இணைக்கும் கூட்டாட்சி நடுவண் அரசு. இலங்கைத் தீவில் இருமொழிவழிச் சமூகங்களும் இணைந்து ஆட்சி அமைப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு இதுதான் எனவும், மாற்றாகத் தீவை இருநாடுகளாகப் பிரிப்பதைத் தவிர வேறுவழியில்லை எனவும், 1949இல் தமிழரசுக் கட்சித் தொடக்க மாநாட்டுத் தலைமை உரையில் கூறியவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம்.

எனினும், கீழிறங்கி வந்து, ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள், 1957இல் பிரதேச சபைகளையும் 1965இல் மாவட்ட சபைகளையும் ஏற்க இணங்கிய பொழுது கூட்டாட்சிக் கொள்கையைத் தமிழர் விட்டுக் கொடுத்தனர். ஒற்றையாட்சி அமைப்புக்குள் எட்டு மாகாண அவைகளை அமைக்க ஜெயவர்தனா-ராஜீவ் 1987இல் உடன்பட்டதையும் தமிழர் ஏற்றனர். 1999இல் தமிழர் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு மீளமைப்பு வரைவும் ஒற்றையாட்சியில் மூன்று பிரதேசங்களைக் கொண்ட அமைப்பாக இலங்கை அமையும் என்றது.

ஒற்றையாட்சி அரசியலமைப்பை மாற்றிக் கூட்டாட்சி அரசியலமைப்பை ஏற்படுத்தத் தொடர்ச்சியாக சிங்களவர் மறுத்து வந்தனர். 1949இல் முன்வைத்த தமது கூட்டாட்சிக் கொள்கைக்குக் குறைந்த ஏற்பாடுகளைத் தமிழர் பலமுறை ஏற்றுக் கொண்டும் அந்த உடன்பாடுகளைச் சட்டமாக்கவோ நடைமுறைப்படுத்தவோ சிங்களவர் ஒவ்வொருமுறையும் மறுத்தனர். இதன் விளைவே 1976 மே 14ஆம் நாளது தமிழீழ அரசு அமைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம். 1977 தேர்தலில் ஈழத்தமிழருள் 80% தினர் இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

சட்ட வலுவற்ற ஆனால் மெய்நிலையான ஆட்சி தமிழர் பகுதிகளில் இன்று நடைபெற்று வருவதற்கு 1976இன் தீர்மானமும் 1977இன் மக்கள் ஆணையுமே அடித்தள வலுவாகும். இம்மெய்நிலைலை ஏற்பதைத் தவிர வேறு வழி கொழும்பு அரசுக்கு இருக்கவில்லை. எனவேதான் புரிந்துணர்வு உடன்பாட்டில் ரணில் விக்கிரமசிங்கா கையெழுத்திட்டு இச்செயல் நிலையையும் மெய்நிலையையும் ஏற்றுக் கொண்டுள்ளார். புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு வழிவகுத்த நோர்வே அரசு முயற்சியை இந்தியாவும் உலக நாடுகள் பலவும் அங்கீகரித்து வருகின்றன.

தாய்லாந்தில் சிங்களவர் – ஈழத்தமிழர் பேச்சு, செப்டெம்பர் 16இல் தொடங்குவது உறுதியாகியுள்ளது. “தமிழீழத்தைத் தவிர வேறு எதையும் பேசுவோம்” எனக் கூறியுள்ளார் ரணில். “தமிழீழம் அமைப்பதைக் கைவிடக் கேட்கிறீர்களே, மாற்றாக எந்த ஏற்பாட்டை முன்மொழிகிறீர்கள்?” என்ற வினாவை அமிர்தலிங்கம் முதலாக அனைத்துத் தமிழரும் சிங்களவரைப் பார்த்துக்கேட்டுவந்துள்ளனர்.

ரணில் வரையிலான எந்தச் சிங்களத் தலைவரும் இதுவரை எந்த யோசனையையும் முன்வைக்கவேயில்லை. “வாருங்கள் பேசுவோம்” என்று மட்டும் தொடர்ந்து கூறுகிறார்கள்.

1985 ஆவணியில் திம்புப் பேச்சுவார்த்தையில், இந்தியாவின் முன்னிலையில், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழர் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முன்வைத்த அடிப்படை நிலைப்பாடுகளாவன:

1. இலங்கையில் தமிழர் தனியான தேசிய இனம்.

2. இலங்கைத் தீவில் தமிழருக்கெனத் தனித் தாயகப் பகுதி உண்டு.

3. ஈழத்தமிழத் தேசிய இனத்துக்குத் தன்னுரிமை உண்டு.

4. இலங்கைத் தீவை நாடாகக் கருதும் தமிழருக்கு அங்கு குடியுரிமையும் மனித உரிமைகளும் உண்டு. 1976இன் தமிழீழத் தீர்மானத்திலிருந்து இறங்கி வந்த நிலைப்பாடுகள் இவை. 1988இல் 4ஆவது நிலைப்பாடு மட்டும் சட்டவடிவம் பெற்றது. “தமிழீழம் அமைப்பதை விட்டுவிடுங்கள். திம்பு நிலைப்பாடுகளை மறந்துவிடுங்கள்.

ஒற்றையாட்சியின்கீழ் சில ஏற்பாடுகளுக்கு உடன்படுவோம். உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்” என எளிதாகச் சிங்களவர் சொல்லிவிடலாம். உடன்பட்ட நிலைக்குச் சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பு வரும். 1957, 1965, 1987, 1999 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் எழுதிய உடன்பாடுகளை ஒருதலையாக முறித்ததுபோல் இம்முறை சிங்களவர் முறியார் என்பதற்கு ஏது உறுதி?

போர் மீண்டும் மூழுவதைத் தவிர்க்கவே, ஈழத்தமிழரின் உடனடித் தேவைகள் பற்றி முதலில் எடுத்து நோக்க வேண்டி உள்ளது. ஓர் இடைக்கால அரசைத் தமிழர் தாயகத்துக்கென அமைத்து அந்த அரசே அங்குள்ள குடிமக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுமாறு அமையவேண்டும் என்ற நம்பிக்கையில் சிங்களவர் – தமிழர் தாயகம் முழுமைக்குமான ஓர் இடைக்கால அரசை அமைப்பதுதான் உடன்பாடு எனில் அந்த அரசுக்குரிய சட்ட வலிமையைக் கொழும்பு நாடாளுமன்றமே கொடுக்க வேண்டும். சிங்களக் கட்சிகள் ஒன்றிணையாமல் இது சாத்தியமில்லை.

சாத்தியமற்றவற்றைச் சாத்தியமாக்கும் கலையே அரசியல். தமிழர் தாயகச் செயல் நிலையையும் மெய்நிலையையும் சட்ட நிலையாக்கும் முயற்சியைத் தாய்லாந்துப் பேச்சைத் தொடர்ந்து கொழும்பில் அரங்கேற்றுவதே நாணயமான அரசியல்.

உடன்பாடுகளை முறிப்பதை மறந்து போன வரலாறாக்கி, உடன்பாடுகளைச் சட்டமாக்கி முழுமனதுடன் நடைமுறைப்படுத்தும் நாட்டுடைத் தலைவராக எந்தச் சிங்களத்தலைமையும் இருந்ததில்லை இனியும் வரப்போவதில்லை. இணக்க வாழ்வில் இனிமை காணும் புதிய வரலாறு படைக்க இலங்கைத் தீவின் இரு மொழிவழி இனங்களும் தயாராகுமா இருதுருவங்களாக இருந்த பிரச்சனை இப்பொழுது மூன்றுவளியாக சிதறியுள்ளதுதான் தற்போதைய நிலை.

வடக்கு மாகாண ரீதியாகவும்.கிழக்கு மாவட்ட ரீதியாகவும் பிரிந்துள்ளது.வடக்கில் நிழல் அரசியலும் கிழக்கில் பகிரங்க அரசியலும்,

-Markkandu Devarajah,L,L,B - Switzerland,