அடுத்து கம்பி எண்ணப்போவது தானே என்கிறார் மகிந்த
அடுத்ததாக தன்னையே அரசாங்கம் கைது செய்யவுள்ளதாக,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று, தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. எமது ஆட்சிக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாத் தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்பட்டன.
தற்போதைய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறியுள்ளது. தனது தோல்விகளை மறைப்பதற்காக எனது குடும்பத்தினரை துன்புறுத்துகிறது.அடுத்து அரசாங்கம் என்னைக் கைது செய்யவுள்ளது. அதன் பின்னர் எனது மனைவி, நாமல், பசில், கோத்தாபய, என்று கைது செய்யப்படுவார்கள்.
அரசாங்கம் என்னைப் பழிவாங்கட்டும். எனது குடும்பத்தை பழிவாங்கக் கூடாது, தற்போதைய நிலையில், நீதி கேலிக்கூத்தாகியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்