தொற்றுநோய் விழிப்புணர்வுக்காக யாழ்.பல்கலையில் கண்காட்சிக் கூடம்
தொற்றா நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொது மக்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு யாழ்.மருத்துவபீடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற மாகாண ஆரோக்கிய கண்காட்சியை அனைவரும் வந்து பார்வையிட வேண்டுமென, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார அமைச்சும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவதுறையுடன் 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாகாண ஆரோக்கிய கண்காட்சி, யாழ் மருத்துவ பீடத்தில் காலை ஆரம்பித்து வைக்கப்பட்டு மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த கண்காட்சி கூடத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் நாடாவெட்டி திறந்து வைத்தார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் பல்கலைக் கழகத்தினர் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் உள்ளிட்ட பல்வெறு தரப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது கண்காட்சியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு துணைவேந்தர் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது..
சமுதாய குடும்ப மருத்துவத் துறையும் வடமாகாண சுகாதாரத் துறையும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்துகின்றனர். இது மாகாண ஆரோக்கிய விழாவின் ஒரு பகுதியாகவே நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரோக்கியமான வாழ்வில் நாங்கள் எவ்வாறு தொற்றா நோயின் தாக்கமின்றி வாழலாம் என்பதையே கண்காட்சி காட்டி நிற்கின்றது.
கடந்த புதன் கிழமை ஆரோக்கியமான வாழ்விற்கு நடைப்பயிற்சி எமக்கு சிறந்த எடுத்துக் காட்டாக அமையும் என்பதனை வெளிப்படுத்தும் முகமாக இந்த இருபகுதியினரும் சேர்ந்து ஏற்பாடு செய்த நடைபயணம் பண்ணையிலுள்ள சுகாதார அமைச்சில் ஆரம்பிக்கப்பட்டு யாழ் மருத்துவ பீடத்தில் நிறைவு பெற்றது.
குறித்த கண்காட்சியில் பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.