Breaking News

நீதிமன்றில் ஆஜராகுமாறு அனுமாருக்கு அழைப்பாணை

இந்துக் கடவுளான அனுமார் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென இந்திய நீதிமன்றமொன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

பீகார் மாநிலத்தின் ரோதாஸ் மாவட்டத்தில் வீதியோரத்திலுள்ள அனுமார் கோவிலை அகற்றுவது தொடர்பாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரோதாஸ் மாவட்டத்தில் வீதி விஸ்தரிப்புக்காக மேற்படி கோவிலை அகற்றுமாறு நகர அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், இதற்கு ஆலய நிர்வாகிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, இக்கோவிலை அகற்றுமாறு கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றில் ஆஜராகுமாறு அனுமாருக்கு அழைப்பாணை அனுப்பியதாக அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி செய்திச் சேவையிடம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவுப் பத்திரத்தை மேற்படி ஆலயத்தில் அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

இதேவேளை, பாரதிய ஜனதா மற்றும் பஜ்ரங் தள் கட்சியினர் இந்த அழைப்பாணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இந்த அழைப்பாணையை நீதிமன்றம் வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.