Breaking News

கிளி.முழங்காவில் ஆசிரியர் விடுதிக் கதவுகளை நள்ளிரவில் தட்டும் இராணுவம்!

கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமையினால் ஆசிரியர்கள் கல்வி கற்பிற்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முழங்காவில் மகா வித்தியாலயத்தியாலயம் அண்மையில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைக்கு அருகில் வெளிமாவட்டங்களிலிருந்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்குவதற்கான விடுதிகளும் காணப்படுகின்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு வேளையில் இராணுவத்தினர் ஆசிரியர் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தாகவும் இரவுகளில் கதவுகளை தட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக உரிய இராணுவ அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதனால் குறித்த பாடசாலையில் வெளி மாவட்ட ஆசிரியர்கள் தங்கி நின்று கல்வி கற்பிப்பதற்கு அச்சமான சூழ்நிலை, ஆசிரியர்களின் பாதுகாப்பு ஆகியன கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அரசாங்கம் மேலதிகமாகவுள்ள இராணுவத்தினரை தமிழ் மக்கள் வாழும் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.