வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடமைகளை பொறுப்பேற்பு (படங்கள் இணைப்பு)
வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமது கடமைகளை இன்று பொறுப் பேற்றுக்கொண்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து இவர் இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் வடமாகாண ஆளுநரின் கடமையேற்கும் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 14 ஆம் திகதி வடமாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.வடமாகாணத்தின் ஆளுநராக பணியாற்றிய எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார, ஓய்வுபெற்றதை அடுத்து ரெஜினோல்ட் குரே அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்..
ரெஜினோல்ட் குரே 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஊடாக களுத்துறை மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானதோடு, 2000, 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றிருந்தார்.கல்வி மற்றும் சிறுகைத்தொழில் ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு அமைச்சுப் பதவிகளையும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலங்களில் வகித்திருந்தார்.
மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி முதல் 2005ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் திகதி வரை மேல் மாகாண முதலமைச்சராக பதவிவகித்த ரெஜினோல்ட் குரே, பின்னர் 2005ஆம் ஆண்டு ஜுலை 3ஆம் திகதி முதல், 2009ஆம் ஆண்டு மே 4ஆம் திகதி வரையும் மீண்டும் மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.