இந்தியாவின் திட்டத்துக்கு வடக்கு முதல்வர் எதிர்ப்பு
இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களின் போதே, இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா இதுதொடர்பாக தி ஹிந்து ஆங்கில நாளிதழிடம், தகவல் வெளியிடுகையில்,
“பலாலி விமான நிலைய விரிவாக்கம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தை அண்டியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களின் நலன்களை பாதிக்கக் கூடும்.பலாலியில் தற்போதுள்ள வசதிகளைக் கொண்டே, தமிழ்நாட்டில் மதுரை அல்லது திருச்சிக்கும், கேரளாவின் திருவனந்தபுரத்துக்கும் விமான சேவைகளை நடத்த முடியும்” என்று சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பலாலி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தமது தனியார் நிலங்களை மீளப் பெறும் முயற்சிகளில் அவற்றின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், விமான நிலைய விரிவாக்கத்தினால் அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கில் அனைத்துலக விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசாங்கம் விரும்பினால் அதற்கு மாற்று இடங்கள் உள்ளன என்று சர்வேஸ்வரனும் குருகுலராஜாவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பலாலியில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை நடத்துவது, மயிலிட்டி துறைமுகத்தை மீனவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பது, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது, ஆகிய விடயங்களை இலங்கை அரசாங்கம் ஒன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அரரசியல் பொருளியலாளரான அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
இவற்றை அரசாங்கம் சரியாக கையாளுமானால், நல்லிணக்கத்தை நோக்கிய, மிக முக்கியமான நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் விடயமாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்து, இந்த திட்டத்துக்குத் தடையாக இருக்காது என்று, இந்தச் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு. இந்திய அரசாங்கமும் இந்த விடயங்களை அறிவார்ந்த முறையில் கவனத்தில் கொள்ளும் என்று நினைக்கிறேன். இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பலாலியில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மாகாணசபை கடந்த 2014 பெப்ரவரியில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.