Breaking News

முக்கியமான முறைப்பாடுகளுக்கே முன்னுரிமை - பரணகம ஆணைக்குழு அறிவிப்பு

முக்கியமான முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விசாரணைகளைத் துரிதப்படுத்தி இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம், கடந்த 15ஆம் நாளுடன் நிறைவடைய விருந்த நிலையில், மே 15ஆம் நாள் வரை ஜனாதிபதியால் அதன் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, “வரும் மூன்று மாதங்களிலும், காணாமற்போனோர் குறித்த மிகமுக்கியமான சம்பவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கவுள்ளோம்.

அத்துடன், மே 15ஆம் நாளுக்கு முன்னர் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், இதுவரை விசாரிக்கப்படாத வழக்குகளில் கவனம் செலுத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

வரும் 26ஆம் நாள் தொடக்கம் நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்தி, காணாமற்போன 600 பேர் பற்றிய சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமற்போனோர் தொடர்பாக, ஆணைக்குழுவிடம் சுமார் 23ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 18 ஆயிரம் முறைப்பாடுகள் பொதுமக்கள் காணாமற்போனமை தொடர்பானவையாகும். ஏனையவை சிறிலங்கா படையினர் பற்றிய முறைப்பாடுகளாகும்.