வலி.வடக்கில் நடேஷ்வரா கல்லூரியை அண்மித்த பகுதிகள் விரைவில் விடுவிப்பு
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள நடேஷ்வரா கல்லூரியை அண்மித்த பகுதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1990ஆம் ஆண்டு போர் காரணமாக வலி.வடக்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின்னர் மக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு படையினரால் பயன்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. எனினும் நடேஷ்வரா கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள் தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்தது.இந்த நிலையில் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, மற்றும் J-233, J -235, J-236 ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான முதற்கட்டப் பணிகள் நிறை
வடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் ஜனாதிபதி வருகையின்போது அல்லது அதற்கு முன்னர் நடேஷ்வரா கல்லூரி மற்றும் பொதுமக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.