Breaking News

மஹிந்த விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் - சுதந்திரக்கட்சி எச்சரிக்கை

மஹிந்த ராஜபக்ஷ விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறிச் செல்ல முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா அல்லது கட்சியை விட்டு விலகிச் செல்வதா என்பதனை மஹிந்தவே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு தீர்மானத்தையும் சுயாதீனமாக எடுக்க பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெரிந்து கொண்டு கட்சியின் ஒழுக்க மற்றும் யாப்பு விதி மீறல்களில் ஈடுபடுவதானது பாரதூரமான தவறாகவே கருதப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயங்களை நன்கு அறிவார் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், மஹிந்த ராஜபக்ஷ, கட்சியில் இணைந்து கொண்ட புதிய உறுப்பினர் ஒருவரைப் போன்று செயற்பட்டு வருகின்றார் எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரையும் கட்சியில் பலவந்தமாக நிறுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், தேவை என்றால் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.