உண்மையை கண்டறிய ஐ.நா தொடர்ந்தும் உதவ வேண்டும்! ஆயர்கள் கோரிக்கை
இலங்கையில் உண்மையைக் கண்டறிந்து நல்லிணக்கத்திற்கு வலுசேர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கத்தோலிக்க சமூக தொடர்புத்துறையின் கொழும்பு மறைமாவட்ட தலைவர் அருட்தந்தை காமினி பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையிடம் இருந்து இவற்றையே இலங்கை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திருப்பீட மிஷன் சங்கங்களின் தகவல் சேவை உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் அண்மையில் இலங்கைக்குப் பயணித்தமை தொடர்பாக இந்த சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உள்ளகப் பொறிமுறை மற்றும் நீதித்துறை பங்களிப்புடன் கூடிய விசாரணைகளே தேவை என்ற விடயத்தை அருட்தந்தை காமினி பெர்ணான்டோ வலியுறுத்தியுள்ளார்.
எனினும், கடந்தகால சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்செயற்பாடுகள் மூலம் நிச்சயம் நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.