மகிந்தவையும், ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்!- அஸாத் சாலி
யோஷிதவை கைதுசெய்வதற்கு முன் அவருக்கு வழி காட்டிய மஹிந்த ராஜபக்சவையும் ஷிராந்தியையுமே கைதுசெய்திருக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணி யின் தலைவரும் மத்திய மாகாணசபை உறு ப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்ததை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தினூடாக பணமோசடி இடம்பெற்றதாக தெரிவித்து யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இதுவரை அவரால் நிராகரிக்க முடியாமல் போயுள்ளது.
அத்துடன், சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் யோஷிதவுக்கும் எந்த தொடர்பும் இல்லையென தெரிவித்த இவர்கள் தற்போது மக்களின் பணத்தைக் கொண்டு அதனை ஆரம்பித்ததாக கூறுகின்றனர்.
ஆனால் மக்களின் பணத்தைக் கொண்டு ஆரம்பித்ததாக கூறும் இவர்கள் யாரிடம் பணம் பெற்றார்கள்? எவ்வளவு தொகை எடுத்தார்கள்? என்பது குறித்த எந்த தகவலையும் இவர்களால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் யோஷிதவை கைது செய்வதற்கு முன் அவருக்கு வழிகாட்டிய மஹிந்த ராஜபக்சவையும் சிராந்தியையுமே கைதுசெய்திருக்க வேண்டும். இவர்களால் தங்களது பிள்ளையை இந்த விடயத்தில் சரியான முறையில் வழிநடத்த முடியாமல் போயுள்ளது.
இவ்வாறான நிலையில் சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் அரசுடைமையாக்கப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அரசுடைமையாக்கப்படவேண்டும்.
ஏனென்றால் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்ற பெரும்பாலான வருமானம் சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு திருப்பப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலமே பெற்றுக்கொண்டதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ஆனால் சுதந்திர கட்சியின் தலைமைப்பதவியை தானே முன் வந்து விட்டுக்கொடுத்ததாக மஹிந்த இதற்கு முன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
என்றாலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடமிருந்து சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு சுதந்திரக் கட்சி யாப்பில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு தலைமைப் பதவி கிடைத்துள்ளது என்றார்.