உள்ளக விசாரணையில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுவார் பொன்சேகா
இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணையில், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளியிடுவார் என்று, அமைச்சர், சரத் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,“உள்ளக விசாரணையில் இராணுவத்தினர் பற்றிய விவாதம் ஆரம்பிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைக்கவுள்ளார்.
இதன்போது, இராணுவத்தினரைச் சுடுவதற்காக துப்பாக்கிதாரிகளுக்கு பணம் கொடுத்தது யார், விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன, விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார், அதில் புலிகள் கொள்வனவு செய்த துப்பாக்கிகளின் வகைகள் என்ன என்பன உள்ளிட்ட பல தகவல்கள் வெளிவரும்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அவருடைய காணி பறிமுதல் செய்யப்பட்டது.இலங்கை வரலாற்றில் துட்டகைமுனுவிற்கு பிறகு வந்த சிறந்த போர்வீரருக்கு அவமானத்தை தேடித்தந்தமைக்காக நான் உள்ளிட்ட அனைவரும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்க வேண்டும். இதற்காக நாம் வெட்கி தலைகுனிகிறோம்.
ஒரு சிறந்த இராணுவ வீருக்கு அவமானத்தை தேடித்தந்த எவருக்கும், ஏனைய இராணுவ வீரர்களின் நலன் குறித்து பேச அதிகாரமோ உரிமையோ இல்லை.சரத் பொன்சேகாவை சிறையில் வைப்பதற்கு பதிலாக கடற்படை தளத்தில் தடுத்து வைக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். அதற்காக நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும். இருப்பினும் அந்த வேண்டுதலும் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் இதுபோன்று இடம்பெற்ற பல விடயங்களுக்கு நியாயம் தேடப்படும்” என்று தெரிவித்தார்.