வடக்கு, கிழக்கில் போராளிகள் உட்பட முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டநிலையில் 169 பேர்
வடக்கு கிழக்கில் போராளிகள் உட்பட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 169 பேர் வாழ்க்கையில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக உயிரிழை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முள்ளந்தண்டு பாதிப்படைந்தவர்களில் 27 பேர் கழுத்துப்பகுதிக்கு கீழ் இயங்காதவர்கள் எனவும், ஏனையவர்கள் இடுப்பு பகுதிக்கு கீழ் இயங்காதவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயனாளிகளுக்கு சிறுதுளி செயற்திட்டத்தின் கீழ் மாதாந்தம் 72 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் 60 பயனாளிகளிற்கு 5 ஆயிரம் ரூபாவும், 12 பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் வவுனியாவில் 10 பேரும், முல்லைத்தீவில் 17 பேரும், கிளிநொச்சியில் 22 பேரும், மன்னாரில் 3 பேரும், யாழ்ப்பாணத்தில் 12 பேரும் உதவித் தொகையைப் பெற்றுவரும் அதேவேளை,கிழக்கு மாகாணத்தில் 8 பேர் இந்த உதவித்தொகையை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டன் புலம்பெயர் ஊதா அமைப்பு 52 பயனாளிகளுக்கும், சிறுவர் நிதியத்துடன் தொடர்புபட்ட அமைப்பிலிருந்து 5 பயனாளிகளும், நாகபூசணி அம்மன் ஆலயம் 15 பயனாளிகளுக்கும் உதவி வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தமது அமைப்பில் பதிவுசெய்த பயனாளிகளே 169 பேர் எனவும் தற்போது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.