Breaking News

போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்படமாட்டாது என ரணில் கூறினாரா?

ஜெனீவா மனித உரிமைச் சபை தீர்மானத்தின்படி போர்க்குற்ற விசாரணைகள் தற்போதைக்கு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூத்த அமைச்சர்கள் சிலரிடம் கூறியதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைன் கொழும்புக்கு சென்று திரும்பிய பின்னர் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாகவும், உள்ளக பொறிமுறையின் மூலம் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு காலம் எடுக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நீதிபதிகள் மற்றும் சர்வதேச ஆலோசனைகளை பெற்று போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணியினர் கடும் எதிர்ப்பு வெளியிடுவதால் அதனை சமாளிக்கும் வகையில் உள்ளக பொறிமுறைகளை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் வடிவமைப்பது எனவும் ரணில் விக்கிரமசிங்க மூத்த அமைச்சர்கள் சிலருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவது தொடர்பான பொறிமுறைகள் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் வடிவமைக்கப்படும் என்றும் அது தொடர்பாக விவாதம் நடத்தப்படும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

இதேவேளை போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தின் மூலம் நடத்த வேண்டும் என கொழும்புக்கு சென்ற ஆணையாளர் அல் ஹுசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தகவல் ஒன்றை வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனாலும் நல்லாட்சி அரசாங்கம் பல உறுதிமொழிகளை வழங்கியதால் கலப்புமுறை நீதிமன்றத்தை விட உள்ளக பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க ஆணையாளர் அல் ஹுசைன் இணங்கியதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலக தகவல்கள் கூறுகின்றன.

கலப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகளை நடத்த இந்திய மத்திய அரசாங்கமும் விரும்பவில்லை எனவும் ஸ்ரீலங்காவின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ற முறையில் உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் விசாரணைகளை நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம், ஆணையாளர் அல் ஹுசைனுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.