அடுத்தவாரமளவில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படலாம்! மஹிந்த ஆரூடம்
எனது குடும்பத்தை தண்டிக்கவும் எனது ஆதரவாளர்களை பழிவாங்கவுமே நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவை அலரிமாளிகையில் இருந்து இயக்கி வருகின்றனர். புலனாய்வு பிரிவிற்கான பொலிஸ் மா அதிபராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க செயற்பட்டு வருகிறார்.
நிதிக்குற்றப்புலனாய்வு விசாரணைப்பட்டியலில் எனது குடும்ப உறுபினர்களே முன்னணியில் உள்ளனர். பாராளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு அடுத்த ஒரு கிழமையில் குறித்த நபரை கைதுசெய்யும் நிலைமை காணப்படுகிறது. அடுத்த வாரமளவில் எனது புதல்வர் நாமல் ராஜபக் ஷவைக்கூட கைதுசெய்ய வாய்ப்புகள் உள்ளன என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யானையின் வாலில் தொங்கிக்கொண்டு சொர்க்கம் செல்ல ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி முயற்சிக்கின்றது. ஆனால் யானையின் வாலில் தொங்கி பயணிப்பதற்கு மக்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை. யானையின் வாலில் தொங்கிக்கொண்டு தலைவர் போகின்றார். அவர் கையை விட்டால் அவரை பின்தொடரும் அனைவரும் அந்தரத்தில் தொங்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த அணியினர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் நீர்கொழும் கொச்சிக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள ரன்வெல் ஹோட்டல் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 95 வீதமானோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மஹிந்த ஆதரவு அணியினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அதேபோல் இந்த சந்திப்பின் போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாம் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் புதிய பயணத்தில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,
யானையின் வாலை பிடித்துக்கொண்டு சொர்க்கம் செல்ல தலைவர் முயற்சிக்கின்றார். தலைவரை பின்தொடர்ந்து தொண்டர்களும் சொர்க்கம் செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் தலைவர் யானையின் வாலை விட்டால் அதன் விளைவு அவரை பின்தொடரும் தொண்டர்களும் கீழே விழவேண்டும். இந்த நிலைமை தான் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. யானையில் தொற்றிக்கொண்டு தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முயற்சிக்கின்றது. இந்த பயணம் நல்லதொரு பயணமாக அமையாது. கட்சியின் தலைவரை நம்பி களமிறங்கிய உறுப்பினர்களையும் இறுதியில் அழுத்தத்திற்கு உட்படுத்தும் வகையில் தான் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளது.
அதேபோல் இன்று நல்லாட்சி அரசாங்கம் பற்றி கதைக்கின்றனர். ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் தனது பயணத்தை அலரிமாளிகையில் இருந்தே ஆரம்பித்துள்ளது. எமது ஆட்சியில் நடத்த மோசடிகளை கண்டறிவதாகவும் அதற்காக நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவை ஆரம்பித்தது அதன் மூலமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு என்பது இலங்கையில் அரசியல் அமைப்பிற்கும் நீதி முறைமைக்கும் முரணானது. இந்த நடைமுறையானது உலகில் எந்த ஒரு நாட்டிலும் கையாளப்படாத முறைமையாகும். அதேபோல் சர்வதேச சட்டதிட்டத்துக்கு முற்றிலும் முரணானது.
எனது குடும்பத்தை தண்டிக்கவும் எனது ஆதரவாளர்களை பழிவாங்கவுமே நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவை அலரிமாளிகையில் இருந்து இயக்கி வருகின்றனர். புலனாய்வு பிரிவிற்கான பொலிஸ் மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக செயற்பாட்டடு வருகிறார். வருகின்றார். இந்த பட்டியலில் எனது குடும்ப உறுபினர்களே முன்னணியில் உள்ளனர். இப்போது பாராளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு அடுத்த ஒரு கிழமையில் குறித்த நபரை கைதுசெய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் எனது புதல்வர் நாமல் ராஜபக் ஷவைக்கூட கைதுசெய்ய வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நாட்டின் அபிவிருத்தி எங்கு சென்றுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் இந்த நாட்டை புதிய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்த போது நாட்டின் அபிவிருத்தியும் மக்களின் வாழ்வாதார நிலைமையும் உயரிய மட்டத்தில் இருந்தது. ஆனால் இன்று நல்லாட்சி என்ற அரசாங்கம் ஒரு ஆண்டுகாலம் ஆட்சியை நடத்தியுள்ளது. இந்த ஒரு ஆண்டுகாலத்தில் நாட்டின் அபிவிருத்திக்காக வாங்கிய சர்வதேச கடன் பணம் எங்கே? நன்கொடைகள் எங்கே? இன்று கிராமங்களுக்கு சென்றால் அங்கு ஒரு பாலத்தை கூட புனரமைக்கவில்லை. ஒரு கட்டிடம் பூரனமாக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு மோசமான ஆட்சியே இன்று நாட்டில் நிலவுகின்றது.
அதேபோல் நான் கட்சியின் தலைமைப்பதவியை கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் அது எந்த வகையிலும் உண்மை அல்ல. நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவே எனது பதவியையும் பறித்தெடுத்தனர். அதேபோல் இன்று என்னை ஆதரித்துவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பழிவாங்கவும் கட்சியில் இருந்து நீக்கவும், ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
ஆகவே அவர்களை காப்பாற்றவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் இப்போது ஒரு அணி தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இன்று இந்த கூட்டத்தில் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் 95வீதமானோர் என்னை நம்பி இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற வேண்டும். அதேபோல் தனித்த பயணத்தை மேற்கொள்ள என்னை அழைக்கின்றீர்கள். இந்த அழைப்பை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆனால் இன்று நாம் அவசரப்பட்டு எந்த காரியத்தையும் முன்னெடுக்க முடியாது. இப்போது நாம் எதிர்க்கட்சியாக செயற்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டு நாம் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.