Breaking News

யோஷிதவின் சிறை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நல்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறை, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையின் ஜே அறைக்குள், இரண்டு சிறை அதிகாரிகள் மாத்திரமே உட்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, 24 மணித்தியாலங்களும் குறித்த இரு அதிகாரிகளின் கண்காணிப்பில் அவர்களை வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் யோஷித உள்ளிட்டவர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் சகல உணவுப் பதார்த்தங்கள் உள்ளிட்ட பொருட்கள், சிறை அதிகாரிகளின் பூரண பரிசோதனையின் பின்னரே சிறைக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த பொருட்களை கொண்டுசெல்பவருடன் ஒரு சிறை அதிகாரியும் உள்ளே செல்லவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

யோஷிதவின் சிறைக்கூண்டிலிருந்து அண்மையில் கைத்தொலைபேசியொன்று கண்டெடுக்கப்பட்ட நிலையிலேயே குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில், கடந்த 6ஆம் திகதி யோஷித உள்ளிட்ட நால்வர் பொலிஸ் நிதி மோசடி தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.