நாங்கள் அதிகாரங்களை கையாள தெரியாதவர்களா? சுமந்திரன் கேள்வி
நாம் ஆட்சி அதிகாரங்களை கையாளத்தெரியாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தென்னிலங்கையாளர்களாலும் வெளிநாட்டவர்களாலும் முன்வைக்கப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்.முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய அரசின் ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கபடவேண்டும் என்பது எமது போராட்டமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் ஓரளவு அதிகாரங்கள் எம்மிடம் வருகின்ற போது அதனை எவ்வாறு கையாள்கியோம் என்பது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகின்றது.
அதிகாரம் கிடைத்துள்ள நிலையில் அதனைபயன்படுத்த தெரியாமல் உள்ளீர்கள் என்ற பாரிய குற்றச்சாட்டு எம்மில் எழுந்துள்ளது. கிடைக்கும் அதிகாரங்களை நாம் சரியாக கையாளவேண்டும்.
ஆகவே நாம் சிலவற்றை உட்கட்சி பூசல் என்று கூறி மூடி மறைக்கமுடியாது. ஒரு கட்சியின் செயற்பாடானது அதன் முழு பொறுப்பு கூறலும் மக்களுக்காகவே இருக்க வேண்டும். கட்சிக்கானதாக இருக்க கூடாது.
அவ்வாறு குற்றசாட்டுக்கள் எழுகின்ற போது அது சரியாக அணுகப்படவேண்டும். சரியான விசாரணை இடம்பெறவேண்டும். அது சரியாக இடம்பெறுகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படவேண்டும்.
ஆகவே மாகாண சபை உறுப்பினர்கள் சில விடயங்களை உட்கட்சி சார்ந்து விவாதித்து தீர்வு கிட்டவில்லையெனில் மக்களுக்காக வெளிப்படையான விசாரணைகளை செய்யவேண்டும்.என்றார்