Breaking News

புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்களை பெறும் நடவடிக்கை யாழில்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிய நியமிக்கப்பட்ட குழு இன்று யாழில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. 

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ். தவராசா, எஸ். விஜேசந்திரன், கொழும்பு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் என். செல்வகுமாரன் மற்றும் குமுது குசும் குமார, ஹரினி அமரசூரிய, உபிள் அபேரத்ன, சுனில் ஜெயரட்ன உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய் மொழி மற்றும் எழுத்து மூல யோசனைகளைப் பெற்றுக்கொண்டனர். 

இந்த அமர்வில், ஈபிஆர்எல்எப் கட்சியின் பிரதிநிதி சுகுசிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் உட்பட முன்னாள் அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றனர். 

நாளையும் குறித்த செயலமர்வு யாழில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.