உள்ளக பொறிமுறை மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு -என்கிறார் ராஜித
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பத்தகுந்த வகையில் உள்ளக விசாரணைப் பொறிமுறையை கையாண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுத்தருவது அரசாங்கத்தின் கடமையாகும். அதேபோல் தமிழ் மக் களின் நீண்டகால பிரச்சினைக்கு இந்த ஆட்சியில் நிரந்தரத்தீர்வை பெற்றுத்தருவோம் என்று அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு இலங்கையின் சிக்கல்களை தீர்ப்பதே சாதகமான வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கிலும், கிழக்கிலும் பொது மக்களின் காணிகளை விடு விப்பது தொடர்பில் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். உள்ளக பொறிமுறைகள் மூலமாக வெகுவிரைவில் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும். அதேபோல் சர்வதேசம் திருப்திப்படும் வகையில் எமது சுயாதீன செயற்பாடுகள் அமை யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக் கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த விடயத்தில் சர்வதேச தலையீடுகளை திணிக்க ஐ.நா.அழுத் தம் கொடுக்காது எனவும் தெரிவித்துள்ளார். இந் நிலையில் உள்ளக பொறிமுறைகளை சுயாதீனமாக அமைக்க அரசு செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகம் ஒன்று க்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு எமது உள்ளக நிலைப்பாட்டை ஆராய்ந்தார். இலங்கையின் இப்போதைய நிலை மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்துள்ளது என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டுள்ளார். அதேபோல் அரச தரப்பை சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பத்தில் அவரின் நிலைப்பாட்டை தெரிவித்ததுடன் இலங்கையின் உள்ளக பொறிமுறையில் தாம் தலையிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இலங்கையின் தற்போதைய சூழலில் அவரின் வருகையை இலங்கை அரசாங்கம் வரவேற்கின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவைக்கைகள் தொடர்பில் உண்மை நிலைமைகள் வெளிப்படுத்தாவிடின் எமது அடுத்தகட்ட நகர்வுகள் மிகவும் கடினமானதாக அமையும் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்த விடயமாகும்.
கடந்த காலத்தில் முன்னைய தலைவர்கள் சர்வதேச தரப்பிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறியமையும் பொய்யாக தம்மை ஜனநாயக வாதிகள் என காட்டிக்கொண்டுள்ளமையுமே இன்றுவரை நாடு பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமைக்கு காரணமாகின. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதில் பாரிய சிக்கல் நிலைமை உள்ளது. இவை சர்வதேச தரப்பிடம் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன.
எனினும் இந்த நல்லாட்சி அரசாங்கம் தனது ஒருவருட கால எல்லையில் எவ்வாறான நகர்வுகளை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்துள்ளது , வடக்கு கிழக்கில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்பதை இன்று சர்வதேச தரப்பு நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எம்மிடையே மூடிமறைக்கும் தந்திரங்கள் எதுவும் இல்லை என்று சர்வதேசம் நம்பக்கூடிய வகையில் உள்ளது. இதனை நல்லதொரு விடயமாகவே கருதுகிறோம்.
ஹுசேனின் வருகையானது இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையை தவிர்த்து சர்வதேச விசாரணையை பலப்படுத்தும் வகையில் அமையும் என நாம் நம்பவில்லை. மாறாக இலங்கையின் செயற்பாடுகளில் சர்வதேச ஒத்துழைப்புகளை வழங்கும் வகையில் தனது ஒத்துழைப்புகளை வழங்குவார் என நாம் நம்புகின்றோம். மேலும் இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு இலங்கையின் சிக்கல்களை மாற்றியமைப்பதே சாதகமான வகையில் அமையும். அதேபோல் நாம் நம்பத்தகுந்த வகையில் எமது உள்ளக விசாரணைப் பொறிமுறையை கையாண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுத்தருவோம். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு இந்த ஆட்சியில் நிரந்தரத்தீர்வை பெற்றுத்தருவோம்.
அதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேசம் அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றது. காணாமல்போனோர் மற்றும் மக்களின் நில அபகரிப்பு தொடர்பில் அவர்கள் குறிப்பிட்டாலும் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்கும் அனைத்துக்கட்ட நடவைக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். உள்ளக பொறிமுறைகள் மூலமாக வெகு விரைவில் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும். அதேபோல் சர்வதேசம் திருப்திப்படும் வகையில் எமது சுயாதீன செயற்பாடுகள் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.