Breaking News

மகிந்தவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி கூறுகிறது

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பான எந்த முடிவையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்று, அந்தச் கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அதிருப்தி அணி்யைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் பலவற்றிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

நீர்கொழும்பில், நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச, ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில், சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்த எந்த முடிவையும் கட்சியின் மத்திய குழு எடுக்கவில்லை என்று மூத்த பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரையும் வேட்டையாடும் வகையில் கட்சி செயற்படாது என்றும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவே முயற்சிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.