Breaking News

கடற்படையை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : செல்வம் அடைக்கலநாதன்

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து நேற்று காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை, தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் சுதந்திரம் ஏற்பட்டுள்ள போதும் எமது வடபகுதி மீனவர்கள் இன்று வரை சுதந்திரமாக கடற்தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் எமது மீனவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். அந்த வகையிலே பள்ளிமுனை மீனவர்கள் இருவர் மீது கடற்படையினர் மேற்கொண்டுள்ள கத்தி வெட்டுச் சம்பவம் அமைந்துள்ளது.

குறித்த சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. பாதிக்கப்பட்ட இரு மீனவர்களும் தற்போது மன்னார், யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுழி ஒடி மீன் பிடியில் ஈடுபட்ட இரு மீனவர்களை எவ்வித காரணங்களும் இன்றி கடற்படை கைது செய்து முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மீனவர்கள் கடலில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை கடற்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியும். ஆனால் கடற்படையினர் அதிகாரத்தை கையில் எடுத்து மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்குதல், அவர்களை வெட்டுதல் போன்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. ஆனால் கடற்படையினர் அதனைத்தான் அரங்கேற்றியுள்ளனர்.

எனவே, குறித்த சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு, மீனவர்கள் மீது கத்தியால் வெட்டி தாக்குதல்களை மேற்கொண்ட கடற்படையினரை உடனடியாக சட்டத்தின் முன்கொண்டுவர பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.